15 September 2011

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி : கருணாநிதி


சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., தனித்து போட்டியிடும் என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை: தமிழக உள்ளாட்சித் தேர்தலில், அரசியல் அடிப்படையோ, கொள்கை அடிப்படையோ முன்வைக்காமல், பொதுமக்களுக்குத் தேவையான சுகாதாரம், கல்வி, சாலை, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட வசதிகளை பொதுப்பணி குறிக்கோளாகக் கொண்டு தி.மு.க., செயல்பட உள்ளது. இதுவே, எல்லாராலும் விரும்பப்படும், ஏற்கப்படும் நிலை என்பதையும் கருத்தில் கொண்டு, உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கூட்டணிகளை உருவாக்குவது தேவையில்லை என்றும் தி.மு.க., முடிவு செய்துள்ளது.

EVKS Elangovan

இதன் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலில் எந்த ஒரு அணியையும் அமைக்காமல், தனித்து போட்டியிட தி.மு.க., முடிவெடுத்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட திமுக முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது, இதன்மூலம் காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துவி்ட்டது என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் கூட்டணி அமைக்காது என்று இன்னும் ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிட இருந்தது. இதனை தெரிந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி முந்திக் கொண்டு உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இருந்தாலும் உள்ளாட்சி தேர்தலில் திமுக தனித்து போட்டியிடுவதாக எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது. இதனால் காங்கிரஸுக்கு இருந்த தேவையற்ற சுமை குறைந்துள்ளது.

திமுகவுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதை இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களோ, காங்கிரஸாரோ விரும்பவில்லை என்பது தெரிந்துதான் திமுக தலைவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கக்கூடும்.

வரும் உள்ளாட்சி தேர்தல்லில் திமுகவினருக்கு காங்கிரஸ் தொண்டர்களின் ஒத்துழைப்பு இருக்காது என்று தெரிந்துதான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்திருப்பார். இது வரவேற்கத்தக்கது.

தனித்துப் போட்டியிடுவோம் என்று அறிவித்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் காங்கிரசாரின் கை விலங்கு உடைக்கப்பட்டு விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் இருக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தலில் தேவை ஏற்பட்டால் காங்கிரஸ் சிறு சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தீவிரவாதத்துக்கு ஆதரவாக இருக்கும் திமுகவை தோற்கடிப்போம் என்றார்.

அக்டோபர் 1ம் தேதி முதல் இரண்டாம் உலகத்தமிழர் பொருளாதார மாநாடு; துபாயில் 4 நாள் நடக்கிறது


துபாய்: இரண்டாம் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு மற்றும் கண்காட்சி துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4 நாள் நடக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் கலாசாரம் மற்றும் பொருளாதார நிலை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. தற்போதைய உலகத் தமிழர் நிலை, முதலீட்டு வாய்ப்புகள், தொழில்நுட்பம் ஆகியவை குறித்து பல நிபுணர்கள் உரையாற்றுகின்றனர். உலகம் முழுவதிலுமிருந்து தமிழர்கள் இதில் பங்கேற்று, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தனி நபர் மற்றும் குழுவாக ஒன்றிணைந்து சமுதாய வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
தொழில் வாய்ப்புகள்- நிதி திரட்டுதல் : இந்த மாநாட்டில் இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நீதிபதிகள், அதிகாரிகள், கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள் பலரும் பங்கேற்கின்றனர். மாநாட்டின் முதல் நாளான 1ம் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை பிரதிநிதிகள் பதிவு நடைபெறும். 2ம் தேதி காலை 09:30 மணிக்கு துவக்க விழா; 12 மணிக்கு உருவாகி வரும் தொழில் வாய்ப்புகள்; பகல் 02:30 மணிக்கு திட்டங்களுக்கான நிதி திரட்டுதல், மாலை04:30 மணிக்கு வளர்ச்சிக்கான திட்டங்கள் மற்றும் புதிய கருத்துக்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

3ம் தேதி காலை 9 மணிக்கு தொழில் வாய்ப்புகளுக்கான சட்டச் சேவைகள்; 11:30 மணிக்கு இந்தியாவிலும் இதர நாடுகளிலும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள்; பகல் 2 மணிக்கு அரசின் ‌ஆதரவு மற்றும் சமுதாய இணைப்பு; மாலை 4 மணிக்கு தொழில் வளர்ச்சிக்கான தமிழ் மொழி மற்றும் தகவல் திறன்கள் குறித்த உரைகள் இடம் பெறும்.

4ம் தேதி காலை 9 மணிக்கு ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகள்; பகல் 11:30 மணிக்கு கல்வி நிறுவனங்கள் மற்றும் சேவைகள்; 2 மணிக்கு சுகாதார பாதுகாப்பு சேவைகள் ஆகியவை குறித்த உரைகள் இடம் பெறும். மாலை 4 மணிக்கு விருது வழங்கு விழாவும், நிறைவு விழாவும் நடைபெறும்.

உலகத்தமிழ் மாமணி விருது: உலகத் தமிழர்களுக்கு பல துறைகளிலும் சேவை புரிந்தவர்களுக்கு உலகத்தமிழ் மாமணி என்ற விருது வழங்கப்படுகிறது. மலேசிய தேசிய நில நிதி கூட்டுறவு சங்க செயல் தலைவர் கே.ஆர்.சோமசுந்தரம், ஆஸ்திரேலியா ஸ்பிரிங் பீல்டு நில கார்ப்பரேஷன் தலைவர் மகாலிங்கம் சின்னதம்பி, அமெரிக்கா வேலுச்சாமி என்டர்பிரைசஸ் தலைவர் பி.வேலுச்சாமி, அமெரிக்கா டெக் மகிந்திரா சேவைகள் தலைவர் பால் பாண்டியன், சிங்கப்பூர் இந்திய தொழில் வர்த்தககழக தலைவர் விஜய் அய்யங்கார், அமெரிக்கா ஸ்ரீ மீனாட்சி கோயிலை உருவாக்கிய எஸ்.கண்ணப்பன், யுஎன்ஐடிஓ., தலைமை இயக்குநரின் முன்னாள் முதன்மை ஆலோசகரான ஆஸ்திரியாவை சேர்ந்த வி.ஜெபமாலை, அமெரிக்கா மைல்ஸ்டோன் மெட்டல்ஸ் தலைவர் ஜி.ராம்பிரசாத், பிரிட்டன் சிறுநீரக நிபுணர் பி.சண்முகராஜ் ஆகியோருக்கு இந்த உலகத் தமிழ் மாமணி விருது வழங்கப்படுகிறது.

இம்மாநாட்டு ஏற்பாடுகளை மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் சம்பத் துபாயில் மாநாட்டு வரவேற்பு குழுத் தலைவரும் ஈடிஏ., குழுமத் தலைவருமான சையது சலாலுதீனைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் அவர் ஈடி‌ஏ., குழுமத்தின் செயல் இயக்குநர் அக்பர் கான், மீரான், தைமூர் ஆகியோரையும் மற்றும் துபாயில் பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகளையும் அவர் சந்தி்த்தார்.

05 September 2011

தனது வாழ்வையே ஆதாரமாக்கும் ஆசிரியர்கள்!

‘ஆசிரியர் தினம்’ நம்மை வார்த்தெடுத்தவர்களுக்கு நன்றி சொல்லும் திருநாள். நம்மை பூமிக்குத் தந்தவர்கள் பெற்றோர்கள்; அடையாளப்படுத்தியவர்கள் ஆசிரியர்களே.

நமக்குள் இருக்கும் திறமையை, வேட்கையைக் கண்டறிந்து அத்துறையில் பிரகாசிக்க காரணமானவர்களில் குறிப்பிட்ட பங்கு ஆசிரியர்களுக்கே உள்ளது. மிகச்சிறந்த வழிகாட்டி, ஆலோசகர், தத்துவவாதி, நண்பன் என எல்லாமுமாக இருந்து நம்மை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள்.


பள்ளியிலும், கல்லூரியிலும் அவர்களின் அருமை நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், நிதர்சன உலகை எதிர்கொள்ளும் போது, அவர்களின் வார்த்தைகள் தான் நம்மை வழிநடத்துகின்றன.


ஆசிரியர் தின வரலாறு


உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில், வெவ்வேறு தேதிகளில் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்தந்த நாட்டை சேர்ந்த சிறந்த கல்வியாளரை கவுரவிக்க அல்லது அந்தந்த நாட்டில், கல்வி தொடர்பாக ஏற்பட்ட ஒரு சிறப்பான மாற்றத்தை நினைவுகூற என்ற காரணங்களுக்காக ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவதால், ஒவ்வொரு நாட்டிலும் தேதி மாறுபடுகிறது.

இந்தியாவில் செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவி வகித்த சர்வபள்ளி திரு. ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளையே ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம் என்பது அறிந்ததே... அவர் ஒரு ஆசிரியராக இருந்தவர். சிறந்த தத்துவமேதை என்று பெயர் பெற்றவர். நல்ல கல்வியாளர். ஒருமுறை அவரது மாணவர்கள் சிலர், அவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டபோது, அவர் பின்வருமாறு கூறினார், ‘எனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடுவதைவிட, அதையே ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால், நான் பெருமையாக உணர்வேன்‘ என்றார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க, கடந்த 1962ம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆசிரியப் பணியின் மதிப்பு

ஆசிரியர்களுடைய பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது. ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்துவது, மிருகங்களை மீறிய சிறப்பு பண்புக்கூறுதான். அந்த சிறப்புப் பண்புக்கூறு சிறந்த கல்வியின் மூலமே கிடைக்கிறது. அந்த சிறந்தக் கல்வியை அளிக்கும் மாபெரும் பணி ஆசிரியர்களை சார்ந்துள்ளது. ஆசிரியர்கள் உருவாக்கும் மாணவர் சமூகமானது, ஒரு நாட்டின் எதிர்காலத்தை மட்டுமல்ல; இந்த உலகின் எதிர்காலத்தையே தீர்மானிக்கிறது. அனைத்து மக்களின் நல்வாழ்வும் அந்த சமூகத்தின் கைகளில்தான் உள்ளது. எனவே, இந்த இடத்தில் ஆசிரியர் என்பவரின் பணியானது, அனைத்தையும்விட உயர்ந்து நிற்கிறது.


மற்ற பணிகளைப்போல ஆசிரியர் பணி என்பது ஒருவரின் வாழ்வாதாரத்திற்கான பணி அல்ல. தனது வாழ்வையே ஆதாரமாக்கும் பணி. அந்தப் பணியில் வேண்டுமானால், வாழ்வை நகர்த்துவதற்கான ஊதியம் கிடைக்கலாம். ஆனால் அந்த ஊதியத்திற்காக அந்தப் பணி அல்ல என்பதுதான் ஒரு சிறந்த ஆசிரியரின் கருத்தாக இருக்க முடியும்.


ஆசிரியர் பணி என்பது ஒரு உயிரோட்டமான பணி. ஆய்வு ரீதியான பணி. உளவியல் ரீதியான பணி. சேவை ரீதியான பணி. அர்ப்பணிப்புள்ள பணி. கால-நேரமற்ற பணி. ஒரு சிறந்த ஆசிரியர் வகுப்பறைக்குள் மட்டுமே ஆசிரியராக இருப்பதில்லை, இருக்கவும் முடியாது. அவர் தன் வாழ்வின் பெரும்பகுதி நேரங்கள் ஆசிரியராகவே இருக்கிறார். அவரின் சேவைக்கு எல்லை கிடையாது. மனித வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி, அதற்கு அர்த்தத்தைக் கொடுக்கும் ஒரு கடமை ஆசிரியருக்கு உள்ளது. உலகில் உள்ள பணிகளிலேயே, ஆசிரியர் பணியே அதிக திறமைகள் தேவைப்படும் பணி என்று சொல்லும் அளவிற்கு அதன் பொறுப்புகள் அதிகம். எனவே, அந்தப் பணிக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவதை உறுதிசெய்வது அரசின் பிரதான கடமை.


எது எப்படியிருந்தாலும், சிறந்த அர்ப்பணிப்பு உணர்வுடன், எந்த லாபநோக்கமும் இன்றி, பாடப்புத்தக அறிவு மட்டுமின்றி, பல்துறை பரந்த அறிவை மாணவர்களுக்கு வழங்கி, அவர்களின் உலகை விரிவடையச் செய்து, உத்திரவாதமான எதிர்காலத்தை தொடர்ந்து வழங்கி வரும் ஆசிரியர்கள் கணிசமான அளவில் சமூக முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்கள். இத்தகைய ஆசிரியர்கள், சமூக உருவாக்கத்தின் மூல ஆதாரங்களாக திகழ்கிறார்கள்.


தற்போதைய மாணவர்கள் மட்டுமின்றி, மாணவப் பருவத்தை கடந்தவர்கள் அனைவரும் தங்களது ஆசிரியர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு நன்றி சொல்வோம்...

04 September 2011

வீடு தேடி வருது உங்க தகுதிக்கு வேலை!


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மைல் நீள கியூவில் காத்திருந்து, முட்டிமோதி கல்விச் சான்றிதழை பதிவு செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விடும். அப்படியே பதிவு செய்தாலும், அரசு வேலை என்பது கோடியில் சிலருக்குதான் கிடைக்கும். அந்த காலம் எல்லாம் இப்ப மலையேறியாச்சு... பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கூட வேலை, வீடு தேடி வரப் போகிறது.

இந்தாண்டு பிளஸ் 2, 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11.81 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் படிப்பு, திறமை ஆகியவற்றுடன் தயாரிக்கப்படும் டேட்டாபேஸ், அரசு துறைகள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களும் ஆன்லைனில் பார்க்கும்படியான வசதியை அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பள்ளி கல்வி துறையுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது.

இதில், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் பட்டியலும் சேர்க்கப்பட உள்ளது. இதனால், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியுடன் உள்ள மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய முடியும்.  மாணவர்கள் விண்ணப்பிக்காமலேயே அவர்களுக்கு  வேலை கிடைக்கும் நிலை உருவாகும்.

படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டக்குழுவின் இயக்குனர் மிஸ்ரா கூறுகையில், ‘இந்தாண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை தனியார் நிறுவனங்களும் பார்க்கும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது.

 இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் வேலைவாய்ப்பு மற்று பயிற்சி துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்Õ என்றார்.  அரசின் இந்த திட்டம் எதிர்கால இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும், வேலை தேடி இளைஞர்கள் பல நிறுவனங்களின் படியேறிய காலம் மாறி, நிறுவனங்கள் திறமையான இளைஞர்களுக்கு வேலை தர போட்டி போடும் நிலை உருவாகும். வேலை உங்கள் வீடு தேடி வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.


பயிற்சியும் உண்டு

‘இது ஒரு நல்ல முயற்சி. தனியார் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பட்டியலை பார்க்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய முடியும். படிப்புடன் பயிற்சி பெற்றவர்களுக்கும், படித்து முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த டேட்டாபேசை தொழிற்பயிற்சி நிறுவனங்களும் பார்க்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்.

அப்போதுதான், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கும், பாதியில் படிப்பை நிறுத்தியவர்களுக்கும் தொழில்பயிற்சி அளித்து அவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியும்Õ என தனியார் நிறுவன உரிமையாளர்களும், கல்லூரி நிர்வாகிகளும் கூறுகின்றனர்.

இப்படியும் வாழ்கிறார் ஒரு எம்.எல்.ஏ.!




மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் (உள்படம்)வசிக்கும் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு.

சென்னை பழவந்தாங்கல் என்ஜிஒ காலனியில் உள்ள அந்த வீட்டைப் பார்ப்பவர்கள் யாரும் அது ஒரு எம்.எல்.ஏ.வின் வீடு என்றால் நம்பமாட்டார்கள். ஒரு மொட்டை மாடியில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை வேயப்பட்ட வீடு அது.
அந்த வீட்டில்தான் மதுரவாயல் தொகுதியில் வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் க.பீம்ராவ் வசிக்கிறார்.

வீட்டிலும் அத்தியாவசியப் பொருள்களைத் தவிர ஆடம்பரப் பொருள்கள் எதுவும் இல்லை. விலை உயர்ந்த பொருள்களாக இரண்டைக் குறிப்பிடலாம்.
ஒன்று ஒரு பித்தளை தவலை. இரண்டாவது திமுக அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட இலவசக் கலர் டிவி. (அந்த டிவியும் பீம்ராவ் மனைவி பிடிவாதமாக வாங்கி வைத்ததாம்.)

இந்த எளிமையான வீட்டில் இருந்துதான் க.பீம்ராவ் கட்சி ரீதியாக சிறப்பாகப் பணியாற்றி வந்துள்ளதுடன், இப்போது தேர்தலிலும் சாதனை படைத்துள்ளார்.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதே தமிழகத்தில் பெரும் போராட்டம்.

பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து வார்டுகள் இதற்குச் சரியான உதாரணம்.
இந்நிலையில்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான க.பீம்ராவ் பொது தொகுதியான மதுரவாயலில் நின்று வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.செல்வத்தைவிட பீம்ராவ் கூடுதலாக 24,011 வாக்குகள் பெற்றுள்ளார். இந்த வெற்றி மூலம் இரண்டு சந்தோஷங்கள் கிடைத்திருப்பதாக க.பீம்ராம் கூறுகிறார்.

ஒன்று: "இன்னும் கூடுதலாக மக்கள் பணியாற்ற ஒரு பதவி கிடைத்திருக்கிறது. ஆனால் இதைப் பதவி என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பொறுப்பு என்றுதான் சொல்வோம். இதன் மூலம் மக்களோடு இன்னும் நெருங்கிப் போகக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.'

இரண்டு: "புது பேன்ட் சட்டைகள் கிடைக்கின்றன. எம்.எல்.ஏ. ஆகிவிட்டதால் அழுக்கு சட்டையோடு எங்கும் போகக்கூடாது என்று தோழர்கள் நினைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு பத்து பேன்ட் சட்டைகள் எடுத்துக் கொடுத்தார்கள். இதைப்போல பல தோழர்கள் புது பேன்ட் சட்டைகள் எடுத்து வருகிறார்கள். இது ஒரு பெரிய சந்தோஷம்' என்கிறார்.

புது பேன்ட் சட்டை கொடுக்கும்போது க.பீம்ராவ் கண்டிப்பாகத் தையல் கூலியையும் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

இந்த முறையைச் சிலர் தவறாக நினைக்கக்கூடும். ஆனால் கட்சி ரீதியான அவர் நடைமுறை வாழ்க்கையைப் புரிந்தவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள்.
1983-ம் ஆண்டு வாலிபர் சங்கம் மூலம் பீம்ராவ் அரசியல் பணிக்கு வந்து, பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகளுக்காகப் போராட்டம் நடத்திச் சிறை சென்றவர்.

இப்போது தென்சென்னை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார். முழு நேர கட்சி ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சியால் அளிக்கப்படும் மாதாந்திரப் படியான 3 ஆயிரம் ரூபாயே அவரின் வருமானம்.

முழு நேர கட்சி நிர்வாகிகளாக இருப்பவர்கள் வேறு பணிகளிலும் இருக்கக்கூடாது. இந்தப் பணத்தைக் கொண்டே குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல். 2 மகன்கள்; ஒரு மகள் என இவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்த மகன் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மற்றவர்கள் பள்ளி வகுப்புகளில் படித்து வருகிறார்கள். இவர்களின் கல்விச் செலவுகளை எல்லாம் உறவினர்களே கவனித்துக் கொள்கிறார்கள்.

எம்.எல்.ஏ.சம்பளம்: எம்.எல்.ஏ.க்களுக்குப் படிகளுடன் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம். இந்தச் சம்பளத்தால் பீம்ராவ் குடும்பம் வசதி பெறும் என்று நினைத்தால் அதுவும் தவறானதாகும். இந்தச் சம்பளம் அனைத்தும் கட்சிக்குச் சென்று அவருக்குக் கிடைக்கப்போவது வெறும் 5 ஆயிரத்து 600 ரூபாயே.
"சம்பளம் முழுவதும் கட்சிக்கே போய்விடுவதால் வருத்தமா?' என்றால் "சம்பளம் என்பது பொருட்டல்ல. எனக்கு மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை எப்படிச் சிறப்பாகச் செய்யலாம் என்பதுதான் கவலையாக இருக்கிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட ஒருவரைக் காப்பாற்றுவதற்குப் போராடும் ஒரு மருத்துவரைப் போல நான் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்' என்று நினைக்கிறேன் என்றார்.

"பொது தொகுதியில் தாழ்த்தப்பட்டவர் வெற்றிபெற்று இருப்பதன் மூலம் தமிழகத்தில் ஜாதி கண்ணோட்டம் குறைந்து போய்விட்டது என எடுத்துக் கொள்ளலாமா?' என்று கேட்டால், "தமிழகம் முழுவதும் குறைந்து போய்விட்டது என்று எடுத்துக் கொள்ள முடியாது. நான் வெற்றிபெற்றது நகர்ப்புறத்தைச் சார்ந்த பகுதி. இங்கு ஜாதி எண்ணம் குறைந்திருக்கலாம்.

ஆனால் ஜாதி உணர்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. எந்தச் ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறப்பான மக்கள் தொண்டு செய்பவர்களாக இருந்தால் அவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்கிற எண்ணம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பது மட்டும் தெளிவாகிறது.

ஜாதியற்ற சமுதாயத்தைக் காணவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் கொள்கை. அதில் வெற்றிபெறலாம் என்கிற நம்பிக்கையை என் வெற்றி ஏற்படுத்தி இருக்கிறது' என்கிறார் க.பீம்ராவ் எம்.எல்.ஏ.