03 March 2011

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தமிழ் வழித் தேர்வு வெற்றி சாத்தியமாகாதது ஏன்?

இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து தமிழக மாணவர்களிடையே உள்ள ஆர்வமும், விழிப்புணர்வும் தான் இதற்கு முக்கியக் காரணம். நகர்ப்புற மாணவர்கள் மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் அதிகம் பங்கேற்றுவருவது மகிழ்ச்சியளிக்கும் விஷயம்.

÷இருந்த போதிலும் தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது குறைவாகவே இருப்பது சற்று கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. பொதுவாக கிராமப்புறத்தில் இருந்து தமிழ் வழிக் கல்வி படித்து வரும் மாணவர்கள்தான் ஐ.ஏ.எஸ். தேர்விலும் தமிழ் வழியைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களால் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போகிறது.

 தமிழ் வழியில் தேர்வில் பங்கேற்கும்  மாணவர்களுக்கும் வெற்றி பெறும் மாணவர்களுக்கும் இடையே உள்ள விகிதம் மிக மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கடந்த ஆண்டு தமிழ் வழியில் தேர்வை எழுதிய ஒரு சில மாணவர்களே தேர்ச்சி பெற்றனர் என்பது கவலை தரக்கூடிய விஷயம். ஏன் இந்தநிலை, இந்நிலை மாற எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து ஐஏஎஸ் தேர்வு பயிற்சி மையம் நடத்துபவர், கல்வியாளர் மற்றும் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிபெற்றவரிடம் கேட்டபோது:
சைதை சா.துரைசாமி,(தலைவர், மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச பயிற்சி மையம்)

சிவில் சர்வீசஸ் தேர்வு பாடத்திட்டத்திற்கு ஏற்ப புத்தகங்கள் கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. ஆங்கிலத்திலோ அல்லது ஹிந்தியிலோ உள்ளது போல தமிழ் வழியில் புத்தகங்கள் கிடைப்பதில்லை. அப்படி, இருந்தாலும் அவை பெரும்பாலும் 1970 மற்றும் 1980களில் வந்த பதிப்பாகவுள்ளது. தமிழ்வழியில் கிடைக்கப் பெறாத பாடத்துக்கு, ஆங்கில வழியில் உள்ள புத்தகங்களையே நாட வேண்டியுள்ளது. அவற்றை படித்து தமிழாக்கம் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மேலும் பிறமொழியில் உள்ள பாடத்திட்டத்துக்கு தேவையான புத்தகங்களை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கு பதிப்பகத்தார் பலரும் முன் வரவில்லை.

இதனால் தமிழக அரசு இதில் சிரத்தை எடுக்க வேண்டும். நிபுணர் குழு ஒன்றை அமைத்து சிவில் சர்வீசஸ் பாடத்திட்டத்துக்கு ஆங்கில மொழியில் உள்ள சிறந்த புத்தகங்களை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும்.
அருளானந்தன் ஐ.டி.ஏ.எஸ். (நிதி மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டு அதிகாரி, இந்திய பாதுகாப்புத் துறை தமிழகத்தில் உள்ள அனைத்து ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்களுமே ஆங்கிலத்துக்கு மட்டும் முன்னுரிமை அளித்து பயிற்சி அளிக்கின்றன. இதனால் தமிழ் வழியில் தேர்வை எழுதும் மாணவர்களுக்கு போதிய வழிகாட்டுதலும், பயிற்சியும் கிடைப்பதில்லை.

சிவில் சர்வீஸ் தேர்வில் நேரம் மேலாண்மை என்பது அவசியம். தமிழ் வட்ட எழுத்தாகவுள்ளதால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் கேள்விகளுக்கு பதிலை எழுதுவது இயலாமல் போய்விடுகிறது. இதனாலும் தமிழ் வழி மாணவர்கள் முதன்மைத் தேர்வில் அதிக மதிப்பெண்ணை பெற முடியவில்லை.

சிவராஜ்வேல் (சங்கர் ஐ.ஏ.எஸ்.பயிற்சி மைய சமூகவியல் கல்வி நிபுணர்)

சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழ் வழியைத் தேர்ந்தெடுத்து எழுதும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகக் குறைவாகவுள்ளது உண்மைதான். இதற்கு பல காரணங்கள் உள்ளன. எனினும் தமிழ் வழி மாணவர்கள் குறைந்த மதிப்பெண்ணை பெற்று வெற்றியை இழப்பதற்கு மூன்று முக்கிய காரணங்களை கூறலாம்.

முதலாவதாக, சிவில் சர்வீசஸ் தேர்வு பாடத்திட்டத்துக்கான புத்தகங்கள் தமிழ் மொழியில் கிடைப்பதில்லை. விருப்பப்பாடம் மட்டுமல்லாது பொது அறிவியல் பாடங்களுக்கும் தமிழில் புத்தகங்கள் கிடைப்பது இல்லை. இதனால் தமிழ் வழியில் எழுதும் மாணவர்களால் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கில வழி மாணவர்களுக்கு நிகராகப் பதிலை செறிவுடன் கொடுக்க முடியவில்லை.

இரண்டாவதாக, பெரும்பாலும் கிராமப்புறங்களில் தமிழ் வழியில் படித்து வரும் மாணவர்கள் தான் சிவில் சர்வீஸ் தேர்விலும் தமிழ் வழியைத் தேர்ந்தெடுத்து எழுதுகிறார்கள். இதுபோன்ற மாணவர்களுக்கு சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளை புரிந்து கொள்வதும் கடினமாக உள்ளது. சில நேரங்களில் மாணவர்கள் கேள்விகளின் அர்த்தத்தை தவறுதலாகப் புரிந்து கொண்டு பதில் எழுதிவிடுவதால் மதிப்பெண்ணை இழக்க நேரிடுகிறது.மூன்றாவதாக, தமிழ் வழியில் நேர்முகத் தேர்வை சந்திக்கும் மாணவர்களால் பெரும்பாலும் அதிகமான மதிப்பெண்ணை பெற முடிவதில்லை.

தமிழ் வழியில் நேர்முகத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் கூறும் பதிலை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கு யுபிஎஸ்சி மொழி பெயர்ப்பாளரை நியமிக்கிறது. இவ்வாறு நியமிக்கப்படும் மொழி பெயர்ப்பாளர் சில நேரங்களில் மாணவர்களின் பதிலை தவறுதலாக மொழி பெயர்த்து கூறிவிடுகின்றனர். இதுபோன்ற தருணங்களிலும் தமிழ் வழி மாணவர்கள் மதிப்பெண்ணை இழக்கும் நிலை உள்ளது.

ஜூன் 30ம் தேதி முதல் 25 காசு செல்லாது!


டெல்லி: நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி முதல் 25 காசு நாணயத்திற்கு மூடு விழா நடத்தவுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

ஒரு காலத்தில் ஒரு காசு, 2 காசு, 5 காசு, 10 காசு என்று நாணயங்கள் இருந்தன. அவற்றை பல ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்தி விட்டனர். இவற்றை இப்போதெல்லாம் காணவே முடிவதில்லை. தற்போது 25 காசு, 50 காசு ஆகியவை மட்டும் புழக்கத்தில் உள்ளன. இதில் 25 காசு நாணயத்தையும் புழக்கத்திலிருந்து நிறுத்த அரசு தீர்மானித்துள்ளது.

அதன்படி ஜூன் 30ம் தேதியுடன் 25 காசு நாணயத்தை நிறுத்தவுள்ளனர். அதற்குப் பிறகு இந்த காசு செல்லாததாக அறிவிக்கப்படும். அதன் பிறகு இதை எங்கும் பயன்படுத்த முடியாது.

எனவே அதற்குள் 25 காசுகளை வைத்துள்ளவர்கள் அவற்றை வங்கிகளில் மொத்தமாக கொடுத்தால் அதற்கு நிகரான தொகையை வங்கிகள் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை ஒருவரிடம் ஒரே ஒரு 25 காசு மட்டும் இருந்து, அதை மாற்றிக் கொள்ள விரும்பினால், அதற்கு ஈடாக என்ன தொகை தருவார்கள்?

01 March 2011

தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல்.

டெல்லி: தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கும். அன்றைய தினம் பிற்பகலுக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.
அதே போல புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைகளுக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. ஆனால், நக்ஸல் பாதிப்புக்குள்ளான மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் ஆறு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது. அதே போல அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.தமிழக சட்டமன்றத்தின் ஆயுட் காலம் வரும் மே மாதம் 16ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அந்தத் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு புதிய சட்டசபை அமைக்கப்பட்டாக வேண்டும்.

ஒரு மாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை:

இதையடுத்து ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. ஆனால், மேற்கு வங்கத்தில் 6 கட்டங்களாகத் தேர்தல் நடப்பதால் வாக்கு எண்ணிக்கை சரியாக ஒரு மாதம் கழித்து மே 13ம் தேதி நடக்கவுள்ளது. தமிழகத்தில் ஓட்டுப் பதிவு முடிந்து ஒரு மாதம் கழித்து தேர்தல் முடிவு வெளியாகப் போவது இதுவே முதல் முறையாகும். மேற்கு வங்கத்தில் வரலாறு காணாத வகையில் 6 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளதால், தமிழகத்தின் வாக்கு எண்ணிக்கை வெகுவாக தள்ளிப் போயுள்ளது.

தேர்தல் நடக்கவுள்ள 5 மாநிலங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந் நிலையில் தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களும் இன்று கூடி இறுதிக் கட்ட ஆலோசனையை நடத்தினர். இதையடுத்து மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் தேர்தல் தேதிகளை அறிவித்தனர்.

4.59 கோடி வாக்காளர்கள்:

தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கூறுகையி்ல், தமிழகத்தில் 4.59 கோடி வாக்காளர்களும் புதுச்சேரியில் 80 லட்சம் வாக்காளர்களும் உள்ளன. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் தான் ஓட்டுப் பதிவு நடைபெறும். முதல் முறையாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலுடன் தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 54,000 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.

மார்ச் 19ல் மனு தாக்கல் தொடக்கம்:

தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும். 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கும். மார்ச் 19ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26. மனுக்கள் பரிசீலனை மார்ச் 28ம் தேதி நடக்கும்.

மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 30.ஏப்ரல் 11ம் தேதி மாலையுடன் பிரச்சாரம் முடிவடையும்.

தமிழகத்தில் 99.98 சதவீதம் பேருக்கு புகைப்பட வாக்காளர் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையைக் கண்டிப்பாக காட்டித்தான் வாக்களிக்க வேண்டும். அது இல்லாதவர்களுக்கு மாற்று ஆவணங்களை அறிவித்துள்ளோம்.இந்த தேர்தலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதல் முறையாக வாக்களிக்க அனுமதிக்கப்படவுள்ளனர்.
இதேபோல கேரளம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டசபைக்கும் ஏப்ரல் 13ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். மேற்கு வங்க மாநிலத்தில் ஏப்ரல் 18, 23, 27, மே 3, 7, 10 ஆகிய தேதிகளில் 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். அஸ்ஸாமில் ஏப்ரல் 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும்.தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. பீகார் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சியினர் சோதனையிட அனுமதிக்கப்பட்டது. அதே நடைமுறை இந்த ஐந்து மாநிலத் தேர்தலிலும் பின்பற்றப்படும் என்றார்.

தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டதால் அரசு புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம்-புதுச்சேரி தேர்தல் அட்டவணை:

வேட்பு மனு தாக்கல்- மார்ச் 19

மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள்- மார்ச் 26

மனுக்கள் பரிசீலனை- மார்ச் 28

மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள்- மார்ச் 30

வாக்குப் பதிவு- ஏப்ரல் 13

வாக்கு எண்ணிக்கை- மே 13

நாளை பிளஸ்டூ தேர்வு தொடக்கம்-28ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடக்கம்.

சென்னை : தமிழகத்திலும், புதுச்சேரியிலும், பிளஸ்டூ பொதுத் தேர்வுகள் நாளை தொடங்குகின்றன. மார்ச் 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. இன்று சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின.இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வை 7,80,631 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். இவர்களில் மாணவிகளின் எண்ணிக்கை 3,87,102 பேர் ஆகும். மாணவர்களை விட 50 ஆயிரத்து 659 மாணவிகள் அதிகம் ஆவர்.

பிளஸ்டூ தேர்வுக்காக தமிழகம் மற்றும் புதுவையில், 1890 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதுவையில் மொத்தம் 11,517 மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர்.இவர்கள் போக தனித் தேர்வர்களின் எண்ணிக்கை 57,086 பேர் ஆவர்.
தேர்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கும், பிற்பகல் 1.15 மணிக்கு முடிவடையும். தேர்வு தொடங்கியதும் முதல் கால் மணி நேரம் வினாத்தாளைப் படித்துப் பார்க்க அவகாசம் தரப்படும்.உடல் ஊனமுற்றோர், பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும்.அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். தேர்வில் முறைகேடுகளில் ஈடுபடுவோரைப் பிடிக்க பறக்கும் படையினரும் தயாராக உள்ளனர். தேர்வுகளில் பிட் அடித்தல், காப்பி அடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோர் பிடிபட்டால் கடும் தண்டனை தரப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


தேர்வு கால அட்டவணை:

மார்ச் 2 - தமிழ் முதல் நாள்

மார்ச் 3 - தமிழ் இரண்டாம் தாள்

மார்ச் 7 - ஆங்கிலம் முதல் தாள்

மார்ச் 8 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

மார்ச் 11 - இயற்பியல், பொருளாதாரம், உளவியல்

மார்ச் 14 - வேதியியல், அக்கவுண்டன்சி, சுருக்கெழுத்து

மார்ச் 17 - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிஷியன் அன்ட் டயட்டிக்ஸ்

மார்ச் 18 - வணிகவியல், மனை அறிவியல், புவியியல்

மார்ச் 21 - உயிரியல், வரலாறு, தாவரவியல், அடிப்படை அறிவியல், வர்த்தக கணிதம்

மார்ச் 23 - தட்டச்சு, கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ கெமிஸ்ட்ரி, சிறப்பு மொழி பாடம்

மார்ச் 25 - அனைத்து தொழில்பாட தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங் (பொது), புள்ளியியல்.



28ம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள்

பிளஸ்டூ தேர்வு முடிவடைந்ததும் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் 28ம் தேதி தொடங்குகின்றன. இந்தத் தேர்வுகள் ஏப்ரல் 11ம்தேதி முடிவடையும். பத்தாம் வகுப்புத் தேர்வை 7 லட்சத்து 54 ஆயிரத்து 679 பேர் எழுதுகின்றனர்.
அதேபோல மெட்ரிகுலேசன் தேர்வு, ஆங்கிலோ இந்தியன் தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. ஆகிய தேர்வுகள் மார்ச் 22-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 11-ந் தேதி முடிகிறது.

சிபிஎஸ்இ தேர்வுகள் தொடங்கின

இதற்கிடையே, சிபிஎஸ்இ எனப்படும் மத்திய கல்வி வாரியத்தின் பத்து மற்றும் பிளஸ்டூவுக்கான பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின.

10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 25ம் தேதியும், பிளஸ்டூவுக்கான தேர்வுகள் ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடையும்.